Advertisement

வரத்து குறைந்ததால் எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு

By: Nagaraj Thu, 23 Mar 2023 10:45:59 PM

வரத்து குறைந்ததால் எலுமிச்சை பழத்தின் விலை உயர்வு

சேலம்: நிறைய பலன்கள் தரும் எலுமிச்சை பழத்தின் வரத்து 20% குறைந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை ஏராளமான செல்வங்களைத் தந்துள்ளது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் வரிசையில் வரும் எலுமிச்சம் பழங்கள் நிறைய பலன்களைத் தர வல்லது.

உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சையை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லாக் காலத்திலும் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய பழம். இதில் உள்ள சிட்ரிக் ஆசிட் நம் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள லெமனோனைன் எனும் தாதுப்பொருள் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். அஜீரணத்தை போக்குவதுடன் வயிற்றுப்போக்கு வாந்தியை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது.

வெயிலினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை உடனடியாக ஈடு செய்யும். எலுமிச்சை சாறுடன் சிறிது இஞ்சி தட்டிப்போட்டு சிட்டிகை உப்பு நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகினால் இழந்த நீர்ச்சத்து பெற்று தாகம் உடனே தணியும்.

இப்படி பல சிறப்புகள் கொண்ட எலுமிச்சம்பழங்களின் தேவை இந்த கோடை காலத்தில் மிக அதிகம் என்பதால் மார்கெட்டில் அதன் விலையேற்றமும் அதிகமாகிவிட்டது.

price rise,information,lemons,shortage of supply,market ,விலை உயர்வு, தகவல்கள், எலுமிச்சம்பழம், வரத்து குறைவு, மார்க்கெட்

சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை தமிழகத்தில் உள்ள பல பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்ததால் விலை சரிந்து பழம் ஒன்று ரெண்டு முதல் நான்கு ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வெயிலுக்கு இதமாக தர்பூசணி, இளநீர், நுங்கு, அனைத்து பழங்களின் ஜூஸ்கள், ஐஸ்கிரீம் போன்றவைகள் இருந்தாலும் உடலுக்கு உடனடி சக்தியுடன் விலையும் மலிவாக இருக்கும் எலுமிச்சைப்பழங்களையே மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்பதால் எலுமிச்சை பழத்தின் தேவை கூடியுள்ளது.

மேலும் எலுமிச்சை பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களில் விளைச்சலும் சரிந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழத்தின் வரத்து 20% குறைந்துள்ளது. வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Tags :
|