Advertisement

கொரோனா தடுப்பூசி போட 30 கோடி பேர் பட்டியல்

By: Karunakaran Sat, 07 Nov 2020 08:32:58 AM

கொரோனா தடுப்பூசி போட 30 கோடி பேர் பட்டியல்

கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், அதை பொதுமக்களுக்கு போடுவதற்கான செயல்திட்டமும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்யும். மாநிலங்கள், மாவட்டங்கள் மூலமாக பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்யும். மாநிலங்கள் தனியாக கொள்முதல் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

முதலில் முன்னுரிமை அளித்து 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். இந்த 30 கோடி பயனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உதவியுடன் மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்த 30 கோடி பேர், 4 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பட்டியலை இம்மாதத்துக்குள் இறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசுகேட்டுக்கொண்டுள்ளது.

corona virus,corona vaccine,india,central government ,கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பூசி, இந்தியா, மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி, ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களில் போடப்படும். தற்போது செயல்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டம் போலவே, மத்திய அரசின் ‘இவின்’ என்ற மின்னணு தளம் மூலம் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும். தடுப்பூசி போட வேண்டிய இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். போலிகளை தடுக்க அவர்களின் ஆதார் எண் இணைக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, ஒவ்வொருவருக்கும் ‘க்யூஆர் கோடு’ உருவாக்கப்பட்டு, அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும். கொரோனா தடுப்பூசிகளை குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட வேண்டியவர்கள் பட்டியல் நீளும் என்பதால், தடுப்பூசி பணி ஓராண்டு காலத்துக்கு நீடிக்கும். தடுப்பூசி போடுவது தொடர்பான அனைத்து பணிகளையும் கவனிக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்களை அமைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags :
|