Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

By: Nagaraj Tue, 06 June 2023 5:01:53 PM

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கண்டவாறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதி 01, அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதி 13, அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதி 07 என ஆக மொத்தம் 22 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

students,girls,hostel,get benefit,district head ,
மாணவர்கள், மாணவிகள், விடுதி, பயன் பெறுங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்

விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ/மாணவிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா 4 இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு வழிகாட்டிகள்/வினா வங்கிகள் வழங்கப்படுகின்றன.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்: பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கு இது பொறுந்தாது. மாணவ/மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமும், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தபட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமும் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.06.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் எதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தழிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ஆதிதிராவிடர் மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags :
|
|