Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ கல்லூரி வகுப்புகள் இன்று தொடங்குகிறது... கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்

மருத்துவ கல்லூரி வகுப்புகள் இன்று தொடங்குகிறது... கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்

By: Monisha Mon, 07 Dec 2020 09:18:45 AM

மருத்துவ கல்லூரி வகுப்புகள் இன்று தொடங்குகிறது... கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தன்மையை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் தெரிவித்தன.

அதன்படி, மருத்துவ படிப்பில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் 48 மணி நேரத்துக்குள் ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை கையில் கண்டிப்பாக எடுத்துவர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அந்த பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்யவும் கல்லூரிகளில் தனியாக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

medicine,college,classes,corona examination,results ,மருத்துவம்,கல்லூரி,வகுப்புகள்,கொரோனா பரிசோதனை,முடிவு

வெளியூர்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கொரோனா பரிசோதனையை எடுக்கமுடியாமல் போயிருந்தால், அந்த மாணவர்கள் தனியறையில் தங்கவைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை முடிவு வந்தபிறகே வகுப்புகளில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுதவிர மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். மாணவர்களுக்கு தேவையான முக கவசங்களை வழங்கவும் சில கல்லூரிகள் முன்வந்து இருக்கின்றன.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு வகுப்பறைக்கு 20 முதல் 25 மாணவர்கள் அமருவதற்கு ஏற்றபடி வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அனைத்து மாணவர்களும் கற்கும் வகையில் அதற்கேற்றபடி சுழற்சிமுறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதுதவிர ஏற்கனவே ஆன்லைன் மூலம் நடக்கும் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி விடுதி அறையில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் வீதம் தங்கவும், சாப்பிடும் அறைகளில் அதிக மாணவர்கள் கூடுவதை தவிர்க்கவும் மாற்று ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் செய்து இருக்கின்றன. நோய் அறிகுறியுடன் யாரும் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க அந்தந்த கல்லூரிகளில் தனியாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிக்குள் நுழையும் மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Tags :