Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வியாபாரிகள் வரவில்லை; சாலையிலேயே 3 லட்சம் கிலோ பருத்தியுடன் தவியாய் தவித்த விவசாயிகள்

வியாபாரிகள் வரவில்லை; சாலையிலேயே 3 லட்சம் கிலோ பருத்தியுடன் தவியாய் தவித்த விவசாயிகள்

By: Nagaraj Sun, 28 June 2020 3:55:43 PM

வியாபாரிகள் வரவில்லை; சாலையிலேயே 3 லட்சம் கிலோ பருத்தியுடன் தவியாய் தவித்த விவசாயிகள்

விவசாயிகள் தவிப்பு... மயிலாடுதுறை அருகே கொரோனா அச்சம் காரணமாக ஏலத்தில் பங்கேற்க வியாபாரிகள் வர மறுத்த நிலையில் 3 லட்சம் கிலோ பருத்தியுடன் விவசாயிகள் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அடுத்த திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை தோறும் பருத்தி ஏலம் நடை பெறுவது வழக்கம். இதற்காக இரு தினங்களுக்கு முன்பாகவே பருத்தியை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வாரம் சீர்காழியில் நடந்த பருத்தி ஏலத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்க வந்திருந்த வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பருத்தி ஏலத்தில் பங்கேற்பதில்லை என்று வியாபாரிகள் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

farmers,cotton,consent,merchants,struggle ,விவசாயிகள், பருத்தி, சம்மதம், வியாபாரிகள், போராட்டம்

இதனால் செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த வாரம் பருத்தி ஏலம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இந்த தகவல் விவசாயிகளுக்கு சென்றடையவில்லையாம். இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த பருத்தி மூட்டைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்படாததால் சுமார் 3 லட்சம் கிலோ பருத்தியுடன் சாலையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்துவிட சம்மதம் தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் தங்களது பருத்தி மூட்டைகளை பாதுகாப்பாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்துள்ளனர்.

மேலும் வியாபாரிகளிடம் பேசி சமூக இடைவெளியுடன் விவசாயிகளை நிற்க வைத்து திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடத்தப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, பருத்தி ஏலத்தில் பங்கேற்க வியாபாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|