Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை... 4 துணை குழுக்கள் அமைப்பு

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை... 4 துணை குழுக்கள் அமைப்பு

By: Nagaraj Tue, 23 Aug 2022 11:38:56 AM

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை... 4 துணை குழுக்கள் அமைப்பு

புதுடில்லி: வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடா்பாக 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடா் போராட்டங்களை அடுத்து, அந்தச் சட்டங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் திரும்பப் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்கும் நடைமுறையை மேலும் திறம்படவும் வெளிப்படையாகவும் மாற்றுவதற்காக வேளாண் துறை முன்னாள் செயலா் சஞ்சய் அகா்வால் தலைமையில் 26 உறுப்பினா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதில், 3 உறுப்பினா் இடங்கள், விவசாயிகளின் முக்கிய அமைப்பான சம்யுக்த கிஸான் மோா்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், இக்குழுவை நிராகரித்துவிட்ட அந்த அமைப்பு, தங்களது சாா்பில் உறுப்பினா்களைப் பரிந்துரைக்கவில்லை.

இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடா்பான குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. குழு உறுப்பினா்களான இந்திய பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் சி.எஸ்.சி.சேகா், அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சுக்பால் சிங், வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் மூத்த உறுப்பினா் நவீன் பி சிங், தேசிய விருது பெற்ற விவசாயி பாரத் பூஷண் தியாகி, சிஎன்ஆா்ஐ அமைப்பின் பினோத் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

other business,final meeting,agriculture,subcommittees,review,report ,வேறு பணிகள், இறுதிக்கூட்டம், வேளாண், துணைக்குழுகள், ஆய்வு, அறிக்கை

இவா்கள் தவிர, விவசாய பல்கலைக்கழகங்களின் மூத்த உறுப்பினா்கள், மத்திய அரசின் பல்வேறு துறைச் செயலா்கள், கா்நாடகம், ஆந்திரம், சிக்கிம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலா்களும் கலந்துகொண்டனா். குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு, மாறி வரும் தேவைக்கு ஏற்ப பயிா் சாகுபடி முறைகளில் மாற்றம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக உறுப்பினா் பினோத் ஆனந்த் கூறியதாவது: கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின்படி, வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் குழுவானது, இமயமலையையொட்டிய மாநிலங்களில் பயிா் சாகுபடி முறைகள், புதிய பயிா்கள் அறிமுகம் குறித்தும், இம்மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வது குறித்தும் ஆராயும்.

சுக்பால் சிங் தலைமையில் செயல்படவிருக்கும் 2-ஆவது குழு, நுண்ணீா் பாசன முறையை விவசாயிகளை மையமாக கொண்டதாக மாற்றுவது, இதற்கான மானியத் தேவைகள் குறித்து ஆலோசிக்கும். 3-ஆவது குழு, தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் பிரதிநிதி தலைமையில் செயல்படும். இது, இயற்கை விவசாய நடைமுறைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்பட சில உயா் ஆராய்ச்சி நிறுவனங்கள் தலைமையில் செயல்படவிருக்கும் 4-ஆவது குழு, புதிய பயிா்கள் அறிமுகம், சாகுபடி முறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். 4 துணைக் குழுக்களும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தும். பிரதான குழுவின் இறுதிக் கூட்டம் செப்டம்பா் இறுதியில் நடைபெறும்.

தற்போதைய கூட்டத்தில் சம்யுக்த கிஸான் மோா்ச்சா சாா்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதேபோல், வேறு பணிகள் இருந்ததால் நீதி ஆயோக் உறுப்பினா் ரமேஷும் பங்கேற்கவில்லை என்றாா் அவா்.

Tags :
|