Advertisement

நிதி நிறுவனங்கள் நடத்தி பல கோடி மோசடி; 3 பேர் கைது

By: Monisha Thu, 24 Dec 2020 11:16:11 AM

நிதி நிறுவனங்கள் நடத்தி பல கோடி மோசடி; 3 பேர் கைது

மூன்று தனியார் நிதி நிறுவனங்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வந்தன. இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் வட்டித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் மாதாந்திர சீட்டும் நடத்தப்பட்டது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.

அதற்கு நிதி நிறுவனத்தில் இருந்து உரிய வட்டித்தொகை வழங்கப்பட்டது. இதனால் வட்டித் தொகையை வாங்கியவர்கள், மாதாந்திர சீட்டிலும் சேர்ந்து பணத்தை செலுத்தினர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த நிதி நிறுவனத்தினர் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. மேலும், அந்த நிதி நிறுவனங்களும் திடீரென மூடப்பட்டன. இதனால் பணத்தை முதலீடு செய்தவர்கள், மாதாந்திர சீட்டில் சேர்ந்தவர்கள் பணத்தை திரும்ப பெறமுடியாமல் தவித்தனர்.

private financial institutions,investment,money,interest,fraud ,தனியார் நிதி நிறுவனங்கள்,முதலீடு,பணம்,வட்டி,மோசடி

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதில் தேனி உள்பட மூன்று மாவட்டங்களில் இருந்தும் இதுவரை மொத்தம் 550 பேர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நிதி நிறுவனங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிஸ்கான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்னரே முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி நடந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

அதில் புகார் அளித்துள்ள 550 பேரிடமும், ரூ.40 கோடி அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிதிநிறுவனங்களின் நிர்வாகிகள் உள்பட எட்டு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் அந்த நிதிநிறுவன கணக்காளரான கோம்பையை சேர்ந்த கருப்பசாமி(வயது 58), உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த தர்வி‌‌ஷ் அக்தர்(32), அவருடைய மனைவி ரஸ்மியாபாத்திமா(25) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
|