நெட்ஃபிளிக்ஸ் நிறுவன மூன்றாம் காலாண்டு வளர்ச்சி குறைவு
By: Nagaraj Wed, 21 Oct 2020 3:48:07 PM
மூன்றாம் காலாண்டு வளர்ச்சி குறைவு... நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வளர்ச்சி குறைவாகவே இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸின் வளர்ச்சி பின் தங்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் 22 லட்சம் சந்தாதாரர்கள் நெட்ஃபிளிக்ஸில் இணைந்துள்ளனர். கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 68 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்திருந்தனர்.
ஆசிய பசிபிக் பகுதிதான் நெட்ஃபிளிக்ஸின் கட்டணச் சந்தாவுக்கு அதிகமாகப் பங்காற்றியுள்ளது. மேலும், இந்தப் பகுதியிலிருந்து வருவாயும் கடந்த வருடத்தை விட 66 சதவீதம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருவாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
"இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமான ஜியோவுடன் இணைந்து
பணியாற்றி வருகிறோம். அவர்களின் மொபைல் மற்றும் ப்ராட்பேண்ட் திட்டங்களுடன்
நெட்ஃபிளிக்ஸ் சேவையையும் சேர்த்துத் தருகிறோம். இந்தக் கூட்டின் ஒரு
அங்கமாக, ஜியோவின் செட்டாப் பாக்ஸில் நெட்ஃபிளிக்ஸ் சேவையை இணைக்கவுள்ளோம்"
என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தும்
முறையை எளிதாக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின்
அனுபவத்தை மேம்படுத்த அதிக முதலீடுகளைச் செய்வதாகவும் கூறியிருக்கும்
நெட்ஃபிளிக்ஸ், 2021ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பழையபடி
மீண்டும் கோவிட்டுக்கு முந்தைய அளவை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியன்
மேட்ச் மேக்கிங் என்கிற நான் ஃபிக்ஷன் தொடரை முதல் நான்கு வாரங்களில்,
இந்திய சந்தாதாரர்களில் 25 சதவீதம் பேர் பார்த்திருப்பதாகவும், இந்தியாவைத்
தாண்டியும் லட்சக்கணக்கான பேர் பார்த்திருப்பதாகவும் நெட்ஃபிளிக்ஸ்
தெரிவித்துள்ளது.