Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் ... புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் ... புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

By: vaithegi Mon, 20 Mar 2023 09:37:31 AM

தமிழக சட்டசபையில் இன்று  பட்ஜெட் தாக்கல் ...  புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் ... தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில், 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்வதற்காக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் அவ்வாறே தாக்கலாகிறது. மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியை பார்த்து, அவர் பட்ஜெட் உரையை வாசிக்கிறார். உறுப்பினர்களும் தங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பட்ஜெட் உரையை பார்த்து தெரிந்து கொள்வார்கள். சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரை இடம்பெறும் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து, சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதே கூட்டத்தில், துறைவாரியாக மானிய கோரிக்கை விவாதத்தையும் எப்போது, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

கடந்தாண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று , இந்த முறையும் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அடுத்த நாள் (22-ந் தேதி) தெலுங்கு வருட பிறப்பு என்பதால் அரசு விடுமுறை நாளாகும். எனவே, சட்டசபைக்கும் விடுமுறை. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்களின் பதிலுரையும் 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.ஏற்கனவே, 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 28-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்டபடி அன்றைய தினம் அது இடம்பெறும்.

budget,tamil nadu assembly,submission ,பட்ஜெட் ,தமிழக சட்டசபை,தாக்கல்

இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெண்களுக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும்" என்று அறிவித்தார். எனவே, இந்த பட்ஜெட்டை பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு?, பயனாளிகளுக்கான வரைமுறை என்ன? என்பது பட்ஜெட் அறிவிப்பில்தான் தெரியவரும். மேலும், பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 2022-2023-ம் நிதி ஆண்டில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.7 ஆயிரம் கோடி குறைந்திருந்தது. 'அது இரட்டிப்பாக குறைக்கப்படும்' என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால், இந்த பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) இழப்பீட்டுத்தொகை, டாஸ்மாக் கடைகள் மூலமாக கிடைத்த வருவாய், பெட்ரோல் - டீசல், கனிமங்கள் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் போன்ற விவரங்கள் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும். அதுபோல, தமிழக அரசுக்கு உள்ள கடன் அளவு எவ்வளவு?, மேலும் வாங்க திட்டமிடப்பட்டுள்ள கடன் அளவு எவ்வளவு? என்பது போன்ற அம்சங்களும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றிருக்கும்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதல் முறையாக சட்டசபைக்கு வருகிறார். அவரது மகனான திருமகன் ஈவெரா இருந்த இருக்கையே ஒதுக்கப்படுமா?, அல்லது அவர் வகித்த பதவிகளை கருத்தில் கொண்டு முன்வரிசையில் இடம் வழங்கப்படுமா? என்பது இன்று காலை தெரிந்து விடும்.அதேபோல், "சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை குறித்த விவகாரம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும், அது முடிவு பெற்ற விவகாரம், எனவே அதுபற்றி சட்டசபையில் இனி பேச வேண்டிய அவசியம் இல்லை" என்றும் ஏற்கனவே சபாநாயகர் மு.அப்பாவு கூறியிருக்கிறார். என்றாலும், இந்த கூட்டத்தொடரிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அந்த பிரச்சினை மீண்டும் எழுப்பப்படும் என்றே தெரிகிறது. ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா மீது சில கேள்விகளை எழுப்பி, கவர்னர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா இக்கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பிவைக்கப்படும். இதுதவிர வேறு பல சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

Tags :
|