Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

By: vaithegi Wed, 20 July 2022 3:48:23 PM

இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் மிக தீவிரம் அடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சென்று, பின்பு சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இதையடுத்து புதிய அதிபர் தேர்தல் 20-ந்தேதி இன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார். எனினும், இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ranil wickramasinghe,sri lanka ,ரணில் விக்ரமசிங்கே,இலங்கை

இதனை தொடர்ந்து, அதிபர் செயலகத்திற்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன், அதிபர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் நேற்று ரணிலின் உருவ பொம்மை ஒன்றை எரித்தனர். நாங்கள் உங்களை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்த அவர்கள், கோத்தபயா வெளியேற்றத்தில் பாதி வேலையே முடிந்துள்ளது. அது முதல் படி. ரணிலும் இதே சூழ்நிலையில் உள்ளவராக பார்க்கப்படுகிறார். நாங்கள் அனைத்து நாடாளுமன்றவாதிகளையும் பார்க்கிறோம் என கூறினர்.

மேலும் அவர்கள் ஊழல் இல்லாத இலங்கை உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கு ஏற்பவே எங்களது வருங்கால போராட்டம் அமையும் என தெரிவித்து இருந்தனர். இதனால், போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து நாடாளுமன்றம் பாதுகாக்கப்படும் வகையில் கவச உடையணிந்த அதிகாரிகள், கமாண்டோ படையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடனும், பல அடுக்கு தடுப்பான்களுடன் போலீசாரும் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :