Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்; வக்கீல் லண்டன் கோர்ட்டில் வாதம்

நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்; வக்கீல் லண்டன் கோர்ட்டில் வாதம்

By: Nagaraj Wed, 09 Sept 2020 3:07:10 PM

நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்; வக்கீல் லண்டன் கோர்ட்டில் வாதம்

வக்கீல் வாதம்... நிரவ் மோடியை நாடு கடத்தி இந்திய சிறையில் அடைத்தால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வக்கீல் லண்டன் கோர்ட்டில் தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

அப்போது முதல், லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கு, லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 5 நாட்கள் முதல்கட்ட விசாரணை நடந்தது.

இந்நிலையில், அதே கோர்ட்டில் நேற்று முன்தினம் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை தரப்பு வாதம் நடந்தது. நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால், அடைக்கப்பட உள்ள மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் கொரோனா நிலவரம் குறித்து நீதிபதி சாமுவேல் கூசி கேட்டறிந்தார்.

2-வது நாளான நேற்று, நிரவ் மோடி தரப்பு வக்கீல் கிளாரி மோன்ட்கொமேரி தனது வாதத்தை தொடங்கினார். அவர் கூறியதாவது: இந்தியாவில் நீதித்துறையின் நேர்மை கணிசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அவருக்கு நேர்மையான விசாரணை கிடைக்காது. நிரவ் மோடி விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது.

nirav modi,commits suicide,will do,lawyer argues ,நிரவ் மோடி, தற்கொலை, செய்து கொள்வார், வக்கீல் வாதம்

அவர் நிரபராதி என்று யூகிக்கக்கூட மறுக்கிறார்கள். அவர் அங்கு வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார். அவரை ‘குற்றவாளி’ என்று அறிவிப்பதை காணும் அரசியல் அவசியம் நிலவுகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் தரமும் வீழ்ச்சி அடைந்திருப்பதை சாட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.

அத்துடன், லண்டன் சிறையில் நிரவ் மோடியின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால், அவருக்கு உளவியல் ஆலோசனை தரப்படுவதில்லை. குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் அவர் வெறும் 25 நிமிடங்கள்தான் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார்.

அவர் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நிலையில் இருக்கிறார். அவர் நாடு கடத்தப்பட்டு, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டால், அங்கு உளவியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. மருத்துவ வசதி கிடைக்காமல், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. அவர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் சிறையில் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார் என்ற இந்திய அரசின் வாக்குறுதியும், சிறை வீடியோவும் போதுமானது அல்ல.

ஏனென்றால், நிரவ் மோடியின் மனநிலையையும், கொரோனா அச்சுறுத்தலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்தர் ரோடு ஜெயிலில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக இந்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

Tags :