Advertisement

ஆம்னி பஸ்கள் அதிகாலை 3 மணி முதலே இயங்க தொடங்கின

By: Monisha Fri, 16 Oct 2020 09:17:40 AM

ஆம்னி பஸ்கள் அதிகாலை 3 மணி முதலே இயங்க தொடங்கின

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த மாதம் 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பஸ் சேவை வழக்கம் போலவே தொடங்கப்பட்டது. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வர முடிகிறது.

ஆனாலும் ஆம்னி பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்தன. ஊரடங்கு காலகட்டத்துக்குட்பட்ட சாலைவரியை ரத்து செய்தால்தான் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சாலைவரி ரத்து செய்வது குறித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16-ந்தேதி முதல் ஆம்னி பஸ்கள் இயக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

omni buses,corona virus,curfew,passenger,private bus ,ஆம்னி பஸ்கள்,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,பயணிகள்,தனியார் பஸ்

அதனைத் தொடர்ந்து ஆம்னி பஸ்களில் தூய்மைப்பணி மும்முரமாக நடந்தது. நேற்று மாலை முதலே பஸ்கள் புறப்பட தயாராகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது குறித்த தகவலால் பயணிகள் நேற்று முன்தினமே ஆன்-லைன் மூலம் வழக்கம்போலவே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கினர்.

இதனையடுத்து இன்று அதிகாலை 3 மணி முதலே ஆம்னி பஸ்கள் இயங்க தொடங்கின. கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஓடாமல் இருந்த ஆம்னி பஸ்கள் புறப்பட தொடங்கியதால் பஸ் உரிமையாளர்களும், தொழிலாளர்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் ஆம்னி பஸ்களை டிரைவர்கள் இயக்கினர். ஆம்னி பஸ்கள் இயங்க தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் வெளியூர் செல்வது மேலும் எளிதாகியுள்ளது.

Tags :
|