இளைஞர்களுக்கு மத்திய அரசு அளிக்கும் வாய்ப்புகள்... இணை அமைச்சர் தகவல்
By: Nagaraj Sun, 19 Feb 2023 10:15:07 PM
புதுடெல்லி: இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் அனைத்து மாநிலங்களும் ஒரே அளவிலான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் அனைத்து மாநிலங்களும் ஒரே அளவிலான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதில்லை.
சில மாநிலங்கள் அதன் கடந்த காலத்தை இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 63வது இடத்தில் இருந்து 1வது இடத்திற்கு முன்னேறும்.
தொழில்நுட்பம் சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். இன்று மத்திய அரசின் மானியம் இடைத்தரகர்களின் கைக்கு செல்லாமல் நேரடியாக மக்களின் கைக்கு செல்கிறது.
தொழில்நுட்பம் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.