Advertisement

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் ...வானிலை மையம்

By: vaithegi Thu, 14 July 2022 5:57:33 PM

நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் ...வானிலை மையம்

நீலகிரி : நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றில் வேக மாறுபாட்டால் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் அணைகள் நிரம்பி வழிகின்றன.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடலூர் பஜார், மேல் கூடலூரில் 18 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலாவில் 15 செமீ மழையும், மேல்பவானியில் 13 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா ஆகிய நான்கு தாலுகாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல வால்பாறை தாலூகாவிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

orange alert,nilgiris ,ஆரஞ்சு அலர்ட்,நீலகிரி

அதனால் நீலகிரி மாவட்டத்திற்கு இந்திய வானிலை மையம் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 12 முதல் 20 செ.மீ. அளவு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும். அத்துடன் நாளை மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :