Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கற்காணம் செக்கில் இயற்கை முறையில் எண்ணெய் உற்பத்தி செய்து ஏற்றுமதி: பட்டுக்கோட்டை எம்.பி.ஏ., பட்டதாரி சரவணன் (மீனாட்சி)

கற்காணம் செக்கில் இயற்கை முறையில் எண்ணெய் உற்பத்தி செய்து ஏற்றுமதி: பட்டுக்கோட்டை எம்.பி.ஏ., பட்டதாரி சரவணன் (மீனாட்சி)

By: Nagaraj Wed, 18 Oct 2023 10:53:06 PM

கற்காணம் செக்கில் இயற்கை முறையில் எண்ணெய் உற்பத்தி செய்து ஏற்றுமதி: பட்டுக்கோட்டை எம்.பி.ஏ., பட்டதாரி சரவணன்  (மீனாட்சி)

தஞ்சாவூர்: விவசாய விளைபொருள்களை இயற்கை முறையில் அதன் தன்மை மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி ராசியங்காடு பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியும், இயற்கை விவசாயியுமான க.சரவணன் (43).

15 ஏக்கரில் தென்னந்தோப்பு, 10 ஏக்கரில் கடலை, எள் ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். இதை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார்.

விவசாயிகள் பொருளாதாரம் உயர முன்னுதாரணமாக அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து கூறியது: என் பேரு சரவணன். அப்பா கருப்பையன். விவசாயி. எங்களுக்கு துவரங்குறிச்சி, ராசியங்காட்டில் சொந்த நிலம் உள்ளது. விவசாயம்தான் முக்கிய தொழில். உழவன் எத்தனை சிரமப்பட்டு உழைத்தாலும் வருமானம் என்பதும் குறைந்துதான் கிடைக்கிறது என்ற கருத்தை உடைக்கும் எண்ணம்தான் எனக்கு மேலோங்கியது. விவசாயிகள் வாழ்வு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உத்வேகமும் எழுந்தது. எம்.பி.ஏ., படித்து விட்டு விவசாயம் பார்க்கலாமா என்ற உறவினர்களின் கேள்விக்கு இதுவும் லாபகரமான தொழில்தான் என்று உணர்த்தவும், இயற்கை முறையில் விவசாயம் செய்து நல்ல லாபம் பெறலாம் என்பதை அனைவருக்கும் புரிய வைக்கவும்தான் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டினேன்.

விவசாயம் செழித்தால், விவசாயிகளின் குடும்பம் மட்டுமா பயன் பெறும்? ஒட்டுமொத்த உலகிற்கே உணவு கிடைக்கும் அல்லவா. விவசாயத்தை பயிர்த்தொழிலாக நினைக்காமல் உயிர்காக்கும் கடமையாகச் செய்யும் விவசாயிகள் வாழ்வு மேம்பட இயற்கை விவசாயம்தான் சரியானது ஆகும். நம்மாழ்வார் ஐயாவுடன் சில ஆண்டுகள் பயணம் செய்துள்ளேன். இயற்கை விவசாயம் எப்படி செய்ய வேண்டும். பஞ்சகவ்யா, மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமிலம் என்று இயற்கை முறையில் விவசாயம் செய்து நஞ்சில்லாத உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோள் ஏற்பட்டது. நம்பிக்கையுடன் அயராத உழைப்பை கொடுத்தால் இயற்கை விவசாயம் நம்மை மேலே மேலே உயர்த்தும் என்பதில் எனக்கு உச்சபட்ச நம்பிக்கை. அது இன்று நிரூபணம் ஆகி உள்ளது.

எங்கள் நிலத்தில் 15 ஏக்கரில் இயற்கை வழியில் தென்னை மரங்கள், 10 ஏக்கரில் நிலக்கடலை, எள் ஆகியவற்றை பயிரிட்டேன். ரசாயன உரங்கள் இன்றி பஞ்ச கவ்யா, மூலிகை பூச்சி விரட்டி என நம்மாழ்வார் ஐயா காட்டிய வழிகாட்டுதலை நினைவில் கொண்டு செயல்பட்டேன். நல்ல விளைச்சல் கிடைத்தது. இப்படி இளநீர், தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவற்றை அப்படியே விற்பனை செய்வதை விட மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றினால் இன்னும் லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.

இதற்காக பல தேடுதல்கள், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பலவற்றையும் தெரிந்து கொண்டு மக்களுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். தினசரி தேவைக்கு நிச்சயம் எண்ணெய் வேண்டும். அதுதான் அஸ்திவாரம். எண்ணெய் இல்லாமல் சமையல் இல்லை. இந்த எண்ணெய்யை சுத்தமான இயற்கை வழிமுறையில் தயாரித்து கொடுக்க முடிவு செய்தேன்.

organic farming,mba graduate,nalwagai,karkanam check ,இயற்கை விவசாயம், எம்.பி.ஏ பட்டதாரி, நல்வாகை, கற்காணம் செக்கு

ஆரோக்கியமான எண்ணெய் தர வேண்டும் என்றால் இயந்திரங்களை கொண்டு எண்ணெய் பிழிவது என்பது சரியானது அல்ல. காரணம் வாகை மரச் செக்கு என்றாலும் மோட்டார் வைத்து இயக்கும் போது எண்ணெய் சூடாகிறது. இதனால் அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் நிச்சயம் அழிந்து விடும். இதற்காகவே பாரம்பரியமிக்க நல்வாகை மாட்டு கல் செக்கை நிர்மாணித்தேன். மாடுகளை கொண்டு கல் செக்கை இயக்கி எண்ணெய் எடுக்க முடிவு செய்தேன். அதை செயல்படுத்திய போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படி மாட்டு கல்செக்கில் எண்ணெய் ஆட்டும் போது கொஞ்சம் கூட எண்ணெய் சூடாவதில்லை. இதனால் அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் முழுமையாக அப்படி இருக்கும். உணவும் ருசிக்கும், உடலுக்கும் ஆரோக்கியம். நல்லெண்ணெய் ஆட்டும் போது கருப்பட்டியும், தேவைக்கேற்ப வெல்லமும் சேர்க்கப்படுகிறது. இதேபோல் சல்பர் மிக்ஸ் ஆகாத தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என்று உற்பத்தி செய்ய தொடங்கினேன்.

எங்கள் நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை, தேங்காய், எள் ஆகியவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்தோம். எண்ணெய்யின் தேவை தினமும் உள்ளதால் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும். இதனால் நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து தேங்காய், கடலை, எள் போன்றவற்றையும் கொள்முதல் செய்து அவர்களுக்கும் நல்ல வருமானத்தை அளித்து வருகிறேன். முதலில் ஒரு யூனிட் மட்டுமே பாரம்பரிய மாட்டு கல்செக்கு அமைத்தேன். இது தற்போது மூன்றாக மாறி உள்ளது. வருங்காலத்தில் அதை 30 எண்ணிக்கையில் உயர்த்த முயற்சிகள் செய்து வருகிறேன்.

மூன்று ஷிப்ட்டாக எண்ணெய் தயாரிப்பு பணி நடக்கிறது. கடலை 16 முதல் 17 கிலோ எண்ணெய்க்காக ஆட்டினால் 40 சதவீதம் கிடைக்கும். மீதி கடலைப்புண்ணாக்கு. இது முழுமையான உயிர்ச்சத்துக்கள் நிரம்பிய எண்ணெய்யாக இருக்கும். எண்ணெய் என்பது ஒருமுறைதான் சூடாக்க வேண்டும். மறுமுறை சூடாக்கும் போது அது உணவில் கெட்ட கொழுப்புகளை ஏற்படுத்தி விடும். நாங்கள் தயாரிப்பது முக்கியமாக சூடாகாத எண்ணெய். இதனால் இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றை மீனாட்சி ஸ்டோர் (வேணிகா ஓவர்சீஸ் ஏஜென்ஸி) வாயிலாக துபாய், அபுதாபிக்கும் ஏற்றுமதி செய்கிறேன். விவசாயி தாங்கள் விளைவிக்கும் பொருளை அப்படியே விற்பனை செய்வதை விட அதை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

இயற்கை முறையில் விவசாயிகள் பயிரிடும் கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, தங்க சம்பா, கருடன் சம்பா, மூங்கில் அரிசி என பாரம்பரியமிக்க அரிசி வகைகளை கொள்முதல் செய்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய உள்ளேன். இதில் சிறுதானியங்களும் அடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :