Advertisement

குமரி மாவட்டத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி

By: Monisha Thu, 01 Oct 2020 5:15:48 PM

குமரி மாவட்டத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி

குமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் இனி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந் வடநேரே அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவிப்புபடி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 31-10-2020 நள்ளிரவு 12 மணி வரை குமரி மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனவே பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும். பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முக கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

kumari district,collector,curfew,shops,wedding ceremony ,குமரி மாவட்டம்,கலெக்டர் பிரசாந் வடநேரே,ஊரடங்கு,கடைகள்,திருமண விழா

குமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் (மருந்து கடைகள் தவிர) இனி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்கலாம். சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும். மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

திருமண விழாக்களிலும், வழிபாட்டு தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய் தொற்றினை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|