Advertisement

இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டிலிருந்தே எழுத அனுமதி

By: Nagaraj Tue, 15 Sept 2020 9:09:05 PM

இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டிலிருந்தே எழுத அனுமதி

கண்ணா லட்டு தின்ன ஆசையா...அப்போ எடுத்துக்கோ என்பதுபோல் வீட்டிலிருந்தே இறுதி செமஸ்டர் தேர்வு எழுதலாம். விடைத்தாள்களை தபாலில் அனுப்பி வைக்கலாம் என்று பல்கலைக்கழகங்கள் அனுமதி அளித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களும் இணைய வசதி இல்லாத கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தபடி இறுதி செமஸ்டர் தேர்வு எழுதி விடைத்தாள்களை தபாலில் அனுப்ப அனுமதித்துள்ளன.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் இறுதி செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், அதற்கான ஆயத்த பணிகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன.

from home,exam,students,universities ,வீட்டில் இருந்து, தேர்வு, மாணவர்கள், பல்கலைக்கழகங்கள்

இதனிடையே, கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை வீட்டில் இருந்து ஆன்லைனில் எழுதலாம் எனவும், இணையவசதி இல்லாதோர் விடைத்தாள்களை தபாலில் அனுப்பலாம் எனவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. இதையடுத்து தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக மாணவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வினாத்தாள் அனுப்பப்படும். தேர்வுகளை பேனா பேப்பர் கொண்டு எழுதிய பின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பல்கலைக்கழக இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஸ்பீட் போஸ்ட் (Speed post) தபாலில் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட அறையில் பேராசிரியர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் தேர்வு எழுதாமல் வீட்டில் இருந்து தேர்வு எழுதுவதால், மாணவர்கள் புத்தகத்தை வைத்து எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது "திறந்த புத்தக" தேர்வாக நடைபெற்றாலும் செமஸ்டர் தேர்வுகளின் தரம் கேள்விக்குறியாகாத வகையில் வினாத்தாள்களை மிகக்கடுமையாக வடிவமைக்க கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு லட்டு தின்றது போல் அமைந்துள்ளது.

Tags :
|