பிரதமர் மோடி கிரிக்கெட் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கிறாராம்
By: Nagaraj Sun, 19 Nov 2023 5:19:42 PM
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சட் மால்ஸும் நேரடியாக சென்று பார்க்கின்றனர்.
3ஆவது முறையாக தனது சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய அணியும், 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா உறுதியாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், அஹமதாபாத்தில் 500 அடி நீள தேசியக் கொடியுடன் கிரிக்கெட் ரசிகர்கள் பேரணி சென்றனர்.
இறுதிப் போட்டியைக் காண இருநாட்டுத் தலைவர்களும் வரவுள்ளதால் நரேந்திர மோடி மைதானம் பல அடுக்குப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மைதானத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, போலீசார் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.