பிரபல யூ டியூபர் வாசன் போலீசார் கைது செய்யப்பட்டார்
By: Nagaraj Tue, 19 Sept 2023 10:33:52 AM
காஞ்சிபுரம்: பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார்.
அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.