பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் விநியோகம்
By: vaithegi Thu, 25 May 2023 3:58:22 PM
சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவர்கள் நாளை முதல் அவரவர் படித்த பள்ளியின் மூலமாகவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், உயர்கல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் தற்காலிக சான்றிதழை தேர்வு துறை இயக்கக இணையதளத்திலிருந்து பதிவேற்றம் செய்து மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி மற்றும் மதிப்பெண் ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதனை சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அது பள்ளி கல்வித்துறை இயக்கத்தின் சார்பில் திருத்தங்கள் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.