மறைந்த முன்னாள் போப்பாண்டவர் பெனடிக் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
By: Nagaraj Tue, 03 Jan 2023 09:00:16 AM
வாடிகன்: பொதுமக்கள் அஞ்சலி... அண்மையில் மறைந்த முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதிகாலையில் இருந்தே மக்கள் பேராலயத்துக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முதல் நாளான நேற்று 10 மணி நேரம் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 25 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையை 8 ஆண்டுகள் வரை வழிநடத்திய போப் 16-ம் பெனடிக்ட் தனது பதவியைத் துறந்து வாடிகனில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி அவர் காலமானார்.