Advertisement

ரஜினியின் அரசியல் கட்சி பெயர், சின்னம் வெளியீடு

By: Monisha Tue, 15 Dec 2020 12:58:22 PM

ரஜினியின் அரசியல் கட்சி பெயர், சின்னம் வெளியீடு

புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லாததால் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் 30-ந் தேதி ரஜினி ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் கட்சி தொடங்குவது உறுதி என்றும் டிசம்பர் 31-ம் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்தார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று ரஜினி தெரிவித்தார். இதற்கிடையே கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக மன்ற நிர்வாகிகள் சிலரை ரஜினி டெல்லிக்கு அனுப்பியிருந்தார். அவர்கள் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.

மேலும், தேர்தல் ஆணையம் ரஜினி கட்சி தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது. நேற்று தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கமல்ஹாசனின் கட்சிக்கு புதுச்சேரியில் “டார்ச் லைட்” சின்னம் கிடைத்துள்ளது.

rajinikanth,election,politics,party,symbol ,ரஜினிகாந்த்,தேர்தல்,அரசியல்,கட்சி,சின்னம்

தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள ஒன்பது கட்சிகளில் 8-வது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம்பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது. இன்று காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சிதான் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் அந்த கட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம்பெற்றிருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 234 தொகுதிகளிலும் இந்த கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னமாக “ஆட்டோ” சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது..

மேலும், கட்சி பெயரையும், சின்னத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணியாற்ற அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். தமிழக அரசியலில் இதுவரை ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது புதிய கட்சியின் சின்னமும் பெயரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|