Advertisement

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

By: vaithegi Wed, 20 July 2022 1:19:48 PM

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

கொழும்பு: இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இதையடுத்து புதிய அதிபர் தேர்தல் 20-ந் தேதி (இன்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி தலைவரும், சமாகி ஜெய பலவேகயா கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவும் போட்டியில் இருந்தார்.

ranil wickramasinghe,sri lanka ,ரணில் விக்ரமசிங்கே ,இலங்கை

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா நேற்று திடீரென அறிவித்தார். ஆளுங்கட்சி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமா வெற்றி பெற தனது கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அழகப்பெருமா, அனுரா குமார திஸ்சநாயகே ஆகிய 3 பேர் களத்தில் இருந்தனர். அவர்களின் வேட்புமனுக்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தன.

இச்சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்றார். கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார்.

Tags :