Advertisement

வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் அரிய வகை கழுகுகள்

By: Monisha Wed, 16 Dec 2020 4:26:45 PM

வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்தில் அரிய வகை கழுகுகள்

நாகை மாவட்டத்தின் வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்லும். 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளில் நான்கு அடி உயரம் உள்ள அழகுமிகு பூநாரை சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இமாச்சல பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.

கடந்த 1963-ம் ஆண்டு இமயமலையிலிருந்து “ஹிமாலய கிரிபன் கழுகு” இந்த சரணாலயத்திற்கு வந்து சென்றது. தற்போது 58 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கோடியக்கரைக்கு மீண்டும் “ஹிமாலய கிரிபன் கழுகு” வந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் ஒன்பது வகையான கழுகுகள் காணப்படுகின்றன. இதில் யூரேசியன் கிரிபன் கழுகு மற்றும் ஹிமாலய கிரிபன் கழுகுகள் உலகில் பழமை வாய்ந்ததாகவும், அழியும் தருவாயிலும் உள்ளன.

birds,sanctuary,himalayas,eagles,waterfowl ,பறவைகள்,சரணாலயம்,இமயமலை,கழுகுகள்,நீர்ப்பறவைகள்

இந்த பழமை வாய்ந்த ஹிமாலய கிரிபன் வகையை சேர்ந்த கழுகுகள், பருவ நிலை மாற்றத்தால் உடலின் சீதோஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள தற்போது ஹிமாலயன் மலைப்பகுதிகளில் இருந்து வேதாரண்யம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு புலம் பெயர்ந்து வந்துள்ளன. இங்கு வந்துள்ள கழுகு சுமார் 25 கிலோ எடை கொண்டது எனவும், இறந்த ஒரு மாட்டை அரை மணி நேரத்தில் உண்ணக்கூடியவை என்றும், இமயமலையில் பருவ நிலை மாற்றம், பனிப்புயல் காரணமாக இடம் பெயர்ந்து கோடியக்கரைக்கு வந்துள்ளது. இவை ஒரு சில நாட்கள் இங்கு தங்கி விட்டு மீண்டும் இமயமலைக்கே சென்று விடும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வகை கிரிபன் கழுகுகள் இறந்த உயிரினங்களின் உடல்களை பிரதானமான உணவாக உண்ணக் கூடியவை. மேலும் இந்த கழுகுகள் ஹிமாலய மலைப்பகுதிகளில், மலையின் உச்சிகளில் 1500 மீட்டர் முதல் 5500 மீட்டர் உயரங்களில் கூடு கட்டி வசிக்கக் கூடியவை. இந்த கழுகுகள் சுமார் 6 கிலோவில் இருந்து 25 கிலோ வரை உடல் எடை கொண்டதாக இருக்கும். இந்த வகை கழுகுகள் கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபால், சீனா மற்றும் மங்கோலியா பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. கோடியக்கரைக்கு வந்த ஹிமாலய கிரிபன் கழுகை வனத்துறையினரும், பொதுமக்களும் பார்த்து ரசித்தனர்.

Tags :
|
|