Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது; கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஐகோர்ட்டில் மனு

ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது; கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஐகோர்ட்டில் மனு

By: Monisha Wed, 23 Sept 2020 11:38:27 AM

ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது; கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஐகோர்ட்டில் மனு

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் அலெக்சாண்டர் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொது வினியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய உணவுபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய உணவு பொருட்களை பெறுவதற்கு 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இதேபோன்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கும் வகையில் மாதந்தோறும் 35 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோதுமையை பொறுத்தவரை மாதந்தோறும் 34 ஆயிரத்து 890 டன் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.

ration items,black market,sales,surveillance camera,chennai high court ,ரேஷன் பொருட்கள்,கள்ளச்சந்தை,விற்பனை,கண்காணிப்பு கேமரா,சென்னை ஐகோர்ட்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது.

அவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் பயனாளர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளது. இதை தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
|