Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவிடம் இருந்தே நல்லிணக்கம் வரவேண்டும்; டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு

இந்தியாவிடம் இருந்தே நல்லிணக்கம் வரவேண்டும்; டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு

By: Nagaraj Fri, 18 Dec 2020 09:34:32 AM

இந்தியாவிடம் இருந்தே நல்லிணக்கம் வரவேண்டும்; டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு

இந்தியத் தரப்பிடமிருந்தே நல்லிணக்கம் வரவேண்டும்... அண்மையில் கைதான இந்திய மீனவர்களை நல்லிணக்கமாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அத்துமீறி இலங்கைக்கு அவர்களே வருவதனால் இந்தியத் தரப்பிடமிருந்தே நல்லிணக்கம் வரவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “இந்திய இழுவைப் படகு மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயற்பாடுகளால் வடக்கு கடற் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக, நாளைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள கடற் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

douglas devananda,government of india,reconciliation,results ,டக்ளஸ் தேவானந்தா, இந்திய அரசு, நல்லிணக்கம், முடிவுகள்

அதேநேரம், கடந்த திங்களன்று கடற்படையினர் எல்லைதாண்டி இங்கு வந்து சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட ஐந்து இழுவைப் படகுகளையும், 36 இந்திய கடற் தொழிலாளர்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

இந்நிலையில், நாம் எடுத்துள்ள அடுத்த முயற்சி இந்தியாவும் இலங்கையும் இந்த அத்துமீறல் தொடர்பாக கலந்துரையாட வேண்டும் என்பதே. அந்தவகையில் காணொளி தொடர்பாடல் ஊடான கலந்துரையாடலுக்கு வரும் 30ஆம் திகதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முதல் நல்லிணக்கமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இந்தியத் தரப்பினர் கேட்டிருக்கின்றார்கள். நாளை அது தொடர்பாக கடற் தொழிலாளர்களுடன் கலந்துரையாடவுள்ளேன்.

இதேவேளை, நான் ஏற்கனவே கூறியதுபோல் நல்லிணக்கம் என்பது இந்திய தரப்பிடமிருந்துதான் வரவேண்டும். ஏனென்றால், அவர்கள்தான் அத்துமீறி இங்கே வருகின்றமையால் அவர்களிடமிருந்தே வரவேண்டும். அதேநேரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இருக்கக்கூடிய நட்புறவுகளைப் பேணுகின்ற அதேநேரத்தில் எமது கடற் தொழிலாளர்களின் நலனையும் நாம் பேணவேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் அந்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :