Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் இருந்து பிரதமர் இம்ரான்கான் விடுவிப்பு

பாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் இருந்து பிரதமர் இம்ரான்கான் விடுவிப்பு

By: Karunakaran Fri, 30 Oct 2020 2:03:07 PM

பாகிஸ்தான் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் இருந்து பிரதமர் இம்ரான்கான் விடுவிப்பு

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவி வகித்தபோது அவரது ஆட்சிக்கு எதிராக தற்போதைய பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 2014-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி, இம்ரான்கான் கட்சியினரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியினரும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்குள்ளும், பிரதமர் இல்லத்துக்குள்ளும் அணி வகுத்து சென்று தாக்குதல் நடத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும் மோதினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மந்திரிகள் ஷா மக்மது குரேஷி, பெர்வேஸ் கட்டாக், சாப்கத் மெக்முத், ஆசாத் உமர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, இஸ்லாமாபாத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நீதிபதி ராஜா அவாத் அப்பாஸ் ஹசன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

prime minister,imran khan,pakistan,parliament attack case ,பிரதமர், இம்ரான் கான், பாகிஸ்தான், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு

இந்நிலையில், தன் மீதான வழக்கை நடத்துவதற்கு அரசு தரப்பு ஆர்வம் காட்டாததால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கான் தனது வக்கீல் அப்துல்லா பாபர் அவான் மூலம் கோர்ட்டில் கோரிக்கை வைத்தார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசு செயல்பட்டபோது, நவாஸ் ஷெரீப் அரசின் அறிவுரைப்படி இந்த வழக்கை அரசு தரப்பு வக்கீல்கள் தொடுத்திருந்தனர். இப்போது ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறின. இம்ரான்கான் அரசின் அறிவுரைப்படிதான் அரசு தரப்பு வக்கீல்கள் இப்போது செயல்படுகிறார்கள்.

தற்போது, இந்த வழக்கில் இருந்து இம்ரான்கானை விடுவித்து நீதிபதி ராஜா அவாத் அப்பாஸ் ஹசன் நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாகிஸ்தான் மந்திரிகள் ஷா மக்மது குரேஷி, பெர்வேஸ் கட்டாக், சாப்கத் மெக்முத், ஆசாத் உமர் மற்றும் மாகாண மந்திரிகள் அலீம் கான், சவுக்கத் யூசுப்ஜாய், பி.டி.ஐ. கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜகாங்கீர் தரீன் ஆகியோர் மீதான விசாரணை தொடரும். அவர்கள் அடுத்த விசாரணைக்கு நவம்பர் 12-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags :