Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பியா நாட்டின் அமேசான் காட்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் மீட்பு

கொலம்பியா நாட்டின் அமேசான் காட்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் மீட்பு

By: Nagaraj Sun, 11 June 2023 10:51:50 PM

கொலம்பியா நாட்டின் அமேசான் காட்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் மீட்பு

கொலம்பியா: கொலம்பியா நாட்டின் அமேசான் காட்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 1ம் தேதி சிறிய ரக விமானம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பயணிகள் மற்றும் ஒரு பழங்குடி இனத் தலைவர் என ஆறு பேர் பயணம் செய்தனர். அந்த விமானத்தை ஓட்டிய பயணியோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர் அந்த விமானத்தில் இருந்தனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயணிகளில் நான்கு பேர் குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமானம் கொலம்பியா நாட்டின் அமேசான் காட்டின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென்று விபத்துக்கு உள்ளானது.

இந்த விமான விபத்தில் நான்கு குழந்தைகளின் தாய் மேக்டலீனா முகுடி வேலன்சியா, விமான பைலட் மற்றும் பழங்குடி இனத் தலைவர் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். இவர்களின் உடல்கள், விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடந்த இடத்தின் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த விமானத்தில் பயணித்த நான்கு குழந்தைகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்தது.

amazon jungle,children,rescue,infant,military,tribal ,அமேசான் காடு, குழந்தைகள், மீட்பு, கைக்குழந்தை, ராணுவம், பழங்குடியினர்

அதைத் தொடர்ந்து, அமேசான் வனப்பகுதியில் காணாமல் போன நான்கு குழந்தைகளைத் தேடும் பணி நடந்தது. விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து வெகு தொலைவில் குழந்தைகளின் ஆடைகள், மற்றும் பால் பாட்டில் கண்டெடுக்கப்பட்டன.

ஆகவே, குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதிய ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தியது. அமேசான் வனப்பகுதி மிகவும் அடர்ந்தவை என்பதால் பழங்குடி இன மக்களின் உதவியின்றி குழந்தைகளைத் தேடுதல் சாத்தியமில்லாதது என்று கருதிய ராணுவம், பழங்குடி மக்களின் உதவியை நாடியது.

அவர்களும் குழந்தைகளைத் தேடும் பணியில் உதவிக்கு வர, 40 நாட்களுக்குப் பிறகு விமான விபத்தில் காட்டில் தொலைந்துபோன குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கின்றனர். இந்தத் தேடுதல் பணியில் தன்னார்வலர்கள் பலரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கொலம்பிய அரசு வெளியிட்டது.

காட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள்: லெஸ்லி ஜேகோபோம்பேர் (13 வயது), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி (9 வயது), டியன் ரனோக் முகுடி (4 வயது) மற்றும் கைக்குழந்தை கிறிஸ்டின் ரனோக் முகுடி என்பது தெரிய வந்திருக்கிறது.

Tags :
|
|