Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்பட்டி சோதனைச்சாவடியில் 26 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

கோவில்பட்டி சோதனைச்சாவடியில் 26 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

By: Monisha Fri, 17 July 2020 4:02:54 PM

கோவில்பட்டி சோதனைச்சாவடியில் 26 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அனைத்து மாவட்ட எல்லைகளிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று அதிகாலை சோதனைச்சாவடியில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் போலீசார் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர். இதில் காரில் இருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த 3 பேரையும் காரில் இருந்து இறங்கச் செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், நெல்லை மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (வயது 37), பாளையங்கோட்டையை சேர்ந்த வினோத் (24), கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

checkpoints,rowdy,arrest,police,investigation ,சோதனைச்சாவடி,ரவுடி,கைது,போலீசார்,விசாரணை

போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து கிடைத்த 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள், அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், கார் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் அவர்கள் 3 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ராஜ்குமார் மீது மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் 7 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கொலை முயற்சி, அரிவாளால் மிரட்டி கொள்ளையடித்தல், ரவுடித்தனம் செய்தல், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அவரது நண்பரான சுரேந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Tags :
|
|
|