Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி 2ம் இடம் பிடித்தது

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி 2ம் இடம் பிடித்தது

By: Nagaraj Fri, 16 Sept 2022 10:54:14 PM

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி 2ம் இடம் பிடித்தது

புதுடெல்லி: சவுதி அரேபியா 2ம் இடம் பிடித்தது... மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி சவுதி அரேபியா 2-வது இடம் பிடித்துள்ளது.

இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஈராக் முதல் இடத்திலும் சவுதி அரேபியா 2-வது இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் 3-வது இடத்திலும் இருந்து வந்தன. இந்நிலையில், கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கு தினமும் 8,19,000 பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து, 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியது. இதனால் சவுதி அரேபியா 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு தினமும் 8,63,950 பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து சவுதி அரேபியா மீண்டும் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது சவுதி அரேபியா ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்த அளவைவிட 4.8% அதிகம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது.

இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டுகச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. ரஷ்யாவிடமிருந்து 2% அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா 16 % பங்கு வகிக்கிறது.

crude oil,imports,august,india,african countries ,கச்சா எண்ணெய், இறக்குமதி, ஆகஸ்ட் மாதம், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள்

தற்போது ரஷ்யா அதன் கச்சா எண்ணெய் மீதான சலுகையை குறைக்கத் தொடங்கியுள்ளது. இதனால், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறைந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து தினமும் 8,55,950 பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.4% சரிவு ஆகும்.

இந்தச் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆகஸ்ட்மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம் 4-வது இடத்திலும் கஜகஸ்தான் 5-வது இடத்திலும் உள்ளன.

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த ஐந்து மாதங்களில் இல்லாதஅளவில் ஆகஸ்ட் மாதம் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா தினமும் 44.5 லட்சம் பீப்பாய் அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

இது ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.1% சரிவு ஆகும். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|