Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ குழு சம்மதம் தெரிவிக்காததால் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

மருத்துவ குழு சம்மதம் தெரிவிக்காததால் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

By: Monisha Thu, 29 Oct 2020 12:35:44 PM

மருத்துவ குழு சம்மதம் தெரிவிக்காததால் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகூடங்கள் மூடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்கும் சூழலில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிக்கூடங்களை தொடங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வந்தது.

ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் அமர வைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வகுப்புகளை தொடங்கலாமா? என்றும் அரசு ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவுவது முழுமையாக குறையாததால் பள்ளிகளை திறக்க மத்திய அரசு முழு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

corona virus,schools,curfew,students,semester exam ,கொரோனா வைரஸ்,பள்ளிகள்,ஊரடங்கு,மாணவர்கள்,அரையாண்டு தேர்வு

தமிழகத்தில் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பள்ளிக்கூடங்களை உடனே திறந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படுமா? என்றும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பக்கத்து மாநிலமான ஆந்திராவில் பள்ளிக்கூடங்களை திறந்த நிலையில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் அங்கு கொரோனா அதிகரித்து விட்டதை மருத்துவ குழுவினர் சுட்டிக்காட்டினார்கள்.

எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்த மாதம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு அதன் பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது. மருத்துவ நிபுணர்கள் முழு சம்மதம் தெரிவிக்காததால் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மேலும் பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Tags :
|