Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பணி ஆணையை ரத்து செய்துள்ள மென்பொருள் நிறுவனங்கள்; வேலையிழந்து தவிக்கும் இளைஞர்கள்

பணி ஆணையை ரத்து செய்துள்ள மென்பொருள் நிறுவனங்கள்; வேலையிழந்து தவிக்கும் இளைஞர்கள்

By: Nagaraj Thu, 09 July 2020 2:18:30 PM

பணி ஆணையை ரத்து செய்துள்ள மென்பொருள் நிறுவனங்கள்; வேலையிழந்து தவிக்கும் இளைஞர்கள்

பணியை இழந்து தவிக்கும் இளைஞர்கள்... கூடுதல் சம்பள ஆசை காட்டி, நேர்முக தேர்வு நடத்தி, வேலைக்கு தேர்வு செய்த சில ஐ.டி., நிறுவனங்கள், தற்போது வழங்கிய பணி ஆணையை ரத்து செய்ததால், பார்த்த வேலையை தொலைத்து விட்டு, அப்பாவி இளைஞர்கள் நிர்கதியாக நிற்கின்றனர்.

நன்கு படித்த இளைஞர்களுக்கு, எளிதாக வேலை கிடைக்கும் இடமாக, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில், சென்னை, ஓ.எம்.ஆரில், தரமணி முதல் சிறுசேரி வரை, நுாற்றுக்கணக்கான, ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன. கொரோனா ஊரடங்கால், ஐ.டி., நிறுவனங்கள் பணி வெகுவாக பாதித்துள்ளது. பல நிறுவனங்கள், வீட்டில் இருந்து பணி செய்ய, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன. போதிய பணி இல்லாததால், சில நிறுவனங்களில், ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, பல ஐ.டி., நிறுவனங்கள், ஊரடங்கு அறிவிப்புக்கு முன், கூடுதல் சம்பள ஆசை காட்டி, நன்கு அனுபவம் வாய்ந்த ஆட்களை, நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுத்தது. அதேபோல், கல்லுாரிகள் வழியாகவும், புதிதாக இளைஞர்களை தேர்வு செய்தது. பணி அனுபவத்தை பொறுத்து, ஊதியம் நிர்ணயம் செய்து, அவர்களுக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது. இதை நம்பி, ஏற்கனவே பார்த்த வேலையை விட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், புதிய நிறுவனங்களுக்கு செல்ல காத்திருக்கின்றனர்.

job,software company,cancellation,curfew,youth ,பணி, மென்பொருள் நிறுவனம், ரத்து, ஊரடங்கு, இளைஞர்கள்

ஊரடங்கு அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள், பணி ஆணையை சில மாதங்கள் நீட்டித்துள்ளன. அதிலும் சில நிறுவனங்கள், 'எக்காரணம் கொண்டும், பணி ஆணையை ரத்து செய்யமாட்டோம்; ஊரடங்கு முடிந்தபின், தேர்வு செய்த நபர்களை பணிக்கு அமர்த்துவோம்' என, அறிக்கையும் விட்டன. இந்நிலையில், சில குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனங்கள், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், பணி ஆணையை ரத்து செய்து, தேர்வு செய்த நபர்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக தகவல் அனுப்பி உள்ளது.

இதனால், ஏற்கனவே பார்த்த வேலையை விட்டு, ஊரடங்கால் மூன்று மாதமாக சம்பளம் இல்லாமல் வீட்டில் முடங்கியதுடன், புதிய வேலையும் இல்லாமல், அப்பாவி இளைஞர்கள், நிர்கதியாக நிற்கின்றனர். பணி ஆணை வழங்கியவர்களுக்கு, ஊரடங்கு முடிந்தபின் வேலை வழங்குவதுடன், ரத்து செய்த பணி ஆணையை வாபஸ் பெற, மென்பொருள் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|