Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு

பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு

By: Nagaraj Fri, 02 Sept 2022 4:13:46 PM

பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக அரசு அதிரடி உத்தரவு... அரசு பள்ளிகளில் செயல்படும் பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவை உடனடியாக மூடவும், அதில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் மீது அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மாணவ, மாணவியர் தற்கொலை, 'போக்சோ' வழக்குகளில் ஆசிரியர்கள் சிக்குவது, தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் கோளாறு என, ஓர் ஆண்டாக அடுக்கடுக்கான பிரச்னைகள்.கிராமப்புற, ஏழை குழந்தைகள் படித்த, அரசு தொடக்கப் பள்ளிகளின் எல்.கே.ஜி.,யை மூட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. இது குறித்து கண்டனங்கள் எழுந்தன. பின், அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், மாநிலம் முழுதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பிறப்பித்த உத்தரவில், 'ஒன்பது அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்பிரிவுகளை மூட வேண்டும். அவற்றில் மாணவர்களை சேர்க்கக் கூடாது.

'ஏற்கனவே சேர்த்திருந்தால், அந்த சேர்க்கையை ரத்து செய்து, மாணவர்களை வேறு பாடப்பிரிவுக்கு மாற்ற வேண்டும்' என கூறியுள்ளார். தென்காசி நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெக்ஸ்டைல் பிரிவு; சங்கரன்கோவில் அரசு பள்ளியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், குருவி குளம் மற்றும் பாவூர்சத்திரம் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப் பிரிவுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நான்கு பள்ளிகளில், அக்கவுன்டன்சி மற்றும் ஆடிட்டிங்; புளியங்குடி ஆண்கள் பள்ளியில் அலுவலக மேலாண்மை பாடப் பிரிவுகளை தாமதமின்றி மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டி அரசு பள்ளியில், வேளாண் அறிவியல் பாடப்பிரிவு மூடப்பட்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குடும்ப மாணவர்கள் படிக்கும் படிப்புகளை, பள்ளிக்கல்வித் துறை மூடி வருவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Tags :
|