தேமுதிகவை கடுப்பேற்றிய திமுக; திரைமறைவில் நடந்த கூட்டணி பேரம்?
By: Nagaraj Tue, 22 Sept 2020 10:34:19 PM
எதிர்பார்த்தது 2 இலக்கம் என்றால் ஒரு இலக்கம் கூட இல்லையா என்று தேமுதிக கோபமடைந்துள்ளது. காரணம்...இதுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக இணையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
அதற்கு காரணம் இரு கட்சிகள் இடையே நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது தான். குறைந்தது 40 தொகுதிகளாவது எதிர்பார்த்த தேமுதிகவுக்கு திமுக ஒற்றை இலக்கத்தில் இடம் ஒதுக்குவதாக கூறியது பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் அளித்திருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் ஓரிரு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டன. இதனால் தான் விஜயகாந்த் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் பதிவு வெளியிட்டும், தேசியக்கொடியை அவமதித்த விவகாரத்தில் எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம் ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரேமலதா.
திமுக கூட்டணியில் குறைந்தபட்சம் 40 தொகுதிகளாவது தரப்பட வேண்டும் என்பது
பிரேமலதா விஜயகாந்தின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது. ஆனால் 10-க்குள்
ஒரு எண்ணைச் சொல்லுங்கள் எனக் கூறியிருக்கிறது திமுக. இதனை சற்றும்
எதிர்பார்க்காத பிரேமலதா விஜயகாந்த் அந்தளவிற்கு கட்சி ஒன்றும் பலவீனம்
அடைந்துவிடவில்லை என்றும் இப்படி ஒரு கூட்டணி வைக்க தேமுதிகவுக்கு
தேவையில்லை எனவும் கர்ஜித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் கூட்டணி
விவகாரத்தில் இன்னும் தேமுதிக தரப்பில் எந்த இறுதி முடிவும்
எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில்
தேமுதிகவை தக்க வைப்பதற்கான முயற்சியும் ஒரு புறம் நடந்து வருகிறது.
டிசம்பர்
மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் பிரேமலதா மாவட்ட வாரியாக முக்கிய
நிர்வாகிகளிடம் கலந்துபேசி பொங்கலுக்கு பிறகு கூட்டணி நிலைப்பாட்டை
விஜயகாந்த் மூலம் அறிவிக்க வைப்பார் எனத் தெரிகிறது.