அதெல்லாம் கிடையாது... கனடா குற்றச்சாட்டு மீதான விசாரணை நிராகரிக்கவில்லை
By: Nagaraj Sat, 18 Nov 2023 6:11:08 PM
லண்டன்: ‘’நிஜார் கொலை வழக்கு தொடர்பான கனடாவின் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்துவதை இந்தியா நிராகரிக்கவில்லை. ஆனால் அதற்கான ஆதாரம் கேட்கிறது,’’ என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கரிடம், நிஜார் கொலை வழக்கு குறித்த கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்க கனடாவுக்கு ஏதேனும் காரணம் இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கனடா ஏதாவது ஆதாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் கனடா அரசு எந்த ஆதாரமும் வழங்கவில்லை. கனடாவின் குற்றச்சாட்டு மீதான விசாரணையை இந்தியா நிராகரிக்கவில்லை.
ஆனால் அதன் கூற்றுகளை வலுப்படுத்துவதற்கான ஆதாரங்களை கனடா வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி உடன் தொடர்பு கொண்டு வருகிறேன்,” என்று தெரிவித்தார்.