சட்டமன்றத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்
By: Nagaraj Wed, 12 Apr 2023 10:07:59 PM
சென்னை: சட்டமன்றத்தில் தாங்கள் பேசுவது ஒளிப்பரப்பு செய்யப்படுவது இல்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வேதனை அளிப்பதாகவும், குற்றம்புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விருத்தாச்சலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தை மேற்கோள்காட்டி எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் விருதாச்சலம் சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அவர் உரையாற்றினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, பாலியல் பலாத்காரம் தொடர்பாக முதல்வர் பேசும் போது நேரலை ஒளிபரப்பாகிறது, தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் பேசும் போது துண்டிக்கப்படுவதாக கூறினார்.
இதனை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் பேட்டியளித்த இ.பி.எஸ், விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் நேற்று மாலையே பெற்றோர் புகார் அளித்தும், பேரவையில் அதிமுக கேள்வி எழுப்பும் என அறிந்த பின்னர் இன்று தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.