உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்க முடியாது என ஆணைக்குழு திட்டவட்டம்
By: Nagaraj Tue, 10 Jan 2023 09:11:23 AM
கொழும்பு: ஏற்றுக் கொள்ள முடியாது... உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நஷ்டத்தைச் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என தெரிவித்து 6.9 மில்லியன் மின் பாவனையாளர்கள் கையொப்பமிட்ட பொது மனுவை இன்று தனது அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, குறைந்தபட்சம் ரூ. 35 பில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்து மறைமுகமாக வெளியேறுகிறது எனவே மின்சார சபை நஷ்டம் அடையாது என தெரிவித்தார்.
நஷ்டத்திற்கு முக்கிய காரணம் ரூபா35 பில்லியன் என்பதை துல்லியமாக நிர்வகிக்க இயலாமையே ஆகும். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும்போது நாட்டின் வழமையான வரிக் கொள்கை மீறப்பட்டுள்ளது.
ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை மதிப்பிடும்போது, US$90 விலை வித்தியாசம் உள்ளது. இந்தக் கணக்கீட்டில் பிழை உள்ளது என்றார் அவர். இதன் விளைவாக, அமைச்சரவை முடிவை நிராகரிப்பதற்கும், தவறான மதிப்புகளின் அடிப்படையில் மின்கட்டண உயர்வை நிராகரிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளது.
"மின் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவு அமைச்சினால் எடுக்கப்பட்ட சட்டவிரோதமான முடிவு" என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.