‘கோவேக்ஸின்’ தடுப்பூசி பாதுகாப்பானது; முதற்கட்ட பரிசோதனையில் தகவல்
By: Nagaraj Sat, 15 Aug 2020 5:08:53 PM
கோவேக்ஸின் தடுப்பூசி பாதுகாப்பானது... இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக முதல்முறையாக தயாரிக்கப்பட்டு உள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி பாதுகாப்பானது என்பது முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதனை மனிதா்களுக்கு செலுத்தி நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனை நாட்டின் 12 இடங்களில் நடைபெற்று வருகிறது. 375 தன்னாா்வலா்கள் மீது நடத்தப்படும் இந்தப் பரிசோதனையில் ‘கோவேக்ஸின்’ பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக ஹரியாணா மாநிலம் ரோட்டக்கில் உள்ள பிஜிஐ மருத்துவ
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பரிசோதனை பணிகளுக்கு தலைமையேற்றுள்ள
மருத்துவா் சவிதா வா்மா கூறுகையில், ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி செலுத்தப்பட்ட
தன்னாா்வலா்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
தற்போதைய
நிலையில் தடுப்பூசி பாதுகாப்பானதுதான். இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள
வேண்டியுள்ளது. அதில் தடுப்பூசி எந்த அளவுக்கு திறம்பட செயல்படுகிறது
என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்தப் பணிக்காக மாதிரிகள்
சேகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.
முதற்கட்ட பரிசோதனை இந்த
மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், பரிசோதனை
பணிகள் வெற்றிபெற்றால் அடுத்த ஆண்டு முதல் பாதியில் ‘கோவேக்ஸின்’
தடுப்பூசி தயாராகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.