Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை

By: vaithegi Wed, 03 Aug 2022 10:28:45 AM

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை

பென்னாகரம்: தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதால், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.

இதனால் கே.எஸ்.ஆர். அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 629 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 9 ஆயிரத்து 250 கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த இரு அணைகளின் இருந்து 44 ஆயிரத்து 879 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு லுவுக்கு கரைபுரண்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டபடி தண்ணீர் வந்தது.

okanagan,ban ,ஒகேனக்கல் ,தடை

இந்நிலையில் நேற்று மாலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது.

இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 25-வது நாளாக தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். மேலும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் ஒகேனக்கலில் முகாமிட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags :