Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுடன் கொடுத்த தொகையை ஏழை மாணவர்கள் கல்விக்காக வழங்கிய கல்வியாளர்

விருதுடன் கொடுத்த தொகையை ஏழை மாணவர்கள் கல்விக்காக வழங்கிய கல்வியாளர்

By: Nagaraj Sun, 16 Aug 2020 7:29:37 PM

விருதுடன் கொடுத்த தொகையை ஏழை மாணவர்கள் கல்விக்காக வழங்கிய கல்வியாளர்

அப்துல் கலாம் விருதுடன் வழங்கப்பட்ட தொகையை ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்கப்போவதாக கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் அப்துல்கலாம் விருது கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த சுதந்திர தினவிழாவில் விருது, தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் அளித்துச் சிறப்பித்தார்.

மாணவர்கள் மேம்பாடு, அறிவியல் வளர்ச்சி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வரும் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்பட்டு வரும் இவ்விருது கடந்த ஆண்டு இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு வழங்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டுக்கான விருது, ஏழை மாணவர்களுக்கு 100% உதவித்தொகையுடன் உயர்கல்வி வழங்கி வரும் ‘ஆனந்தம் யூத் ஃபவுண்டேசன்’ அமைப்பின் நிறுவனத்தலைவர், கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் இருந்து சென்னைக்கு வந்து பல்வேறு துறைகளில் இயங்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ‘ஆனந்தம்’ அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக +2க்குப் பிறகு பணமில்லாமல் படிக்க முடியாத மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி வருகிறார்கள்.

anandham selvakumar,students,education,award amount ,ஆனந்தம் செல்வக்குமார், மாணவர்கள், கல்வி, விருது தொகை

இப்படி ஆனந்தம் அமைப்பு வாயிலாக படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தற்போது நல்ல பொறுப்புகளில் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமப்புறத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களின் வாழ்வில் இத்தகைய மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் ஆனந்தம் அமைப்பை நிறுவி, முன்னின்று செயல்பட்டு வருவதற்காகவும், கல்வித்துறையில் மாணவர்களின் வளர்ச்சி, உயர்படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் போன்ற மாணவர் மேம்பாடு தொடர்பானவற்றில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருவதற்காகவும் கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமாருக்கு டாக்டர் அப்துல்கலாம் விருதினை தமிழக அரசு வழங்கியுள்ளது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் டாக்டர்.அப்துல்கலாம் விருதினையும் , தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, கல்வியாளர் ஆனந்தம் செல்வக்குமாருக்கு வழங்கி சிறப்பித்தார்.

அப்துல் கலாம் விருதினை ஆனந்தம் அமைப்பை நடத்துவதற்கு தம்மோடு இணைந்து பயணிக்கும் அத்தனை நண்பர்களுக்கும், ஆனந்தத்தின் மாணவச் சகோதர- சகோதரிகளுக்கும் அர்ப்பணிப்பதாக கூறியுள்ள செல்வக்குமார், விருது தொகையான ரூ.5 லட்சத்தையும் ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ஆனந்தம் அமைப்புக்கே அளித்துவிடப் போவதாக கூறியுள்ளார்.

இன்றைய சூழலுக்கு ஏற்ற உயர்கல்வியை எல்லா மாணவர்களுக்கும் சாத்தியமாக்க வேண்டும். அவர்களை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத இலக்கை நோக்கிய தங்களின் பயணத்திற்கு டாக்டர்.அப்துல்கலாம் பெயரிலான விருது உத்வேகம் அளிப்பதாகவும் ஆனந்தம் செல்வக்குமார் தெரிவித்தார்.

Tags :