Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருக்கிறது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருக்கிறது

By: vaithegi Fri, 22 July 2022 09:53:55 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருக்கிறது

மேட்டூர்: கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 80 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 13-வது நாளாக தடை நீடிக்கிறது. பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

mettur dam,water supply ,மேட்டூர் அணை,நீர்வரத்து

மேலும் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 74 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதை அடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 120.49 அடியாக இருந்தது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது.

Tags :