Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

By: vaithegi Mon, 10 Apr 2023 09:52:02 AM

விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை

சென்னை: தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20 மற்றும் 21-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் தாக்கல் செய்தனர்.

அதன்பின் தொடர்ந்து 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி புனித வெள்ளி, 8ம் தேதி சனிக்கிழமை, 9ம் தேதி(நேற்று) ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை அடுத்து 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.

legislature,vacation ,சட்டப்பேரவை ,விடுமுறை

கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இவ்விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.

மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதில் அளிப்பார். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது.

இவ்விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவர். வருகிற ஏப்ரல் 21-ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.

Tags :