Advertisement

பாகிஸ்தானில் பரிதாபமான நிலையில் வாழும் ஒற்றை யானை

By: Nagaraj Sun, 06 Sept 2020 2:14:17 PM

பாகிஸ்தானில் பரிதாபமான நிலையில் வாழும் ஒற்றை யானை

பாகிஸ்தானில் வாழும் ஒரே யானை மிருகக்காட்சி சாலையில் வாழும் ஒற்றையானை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் கடுமையாக உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒற்றை யானையை கம்போடியாவுக்கு இடம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், ஃபோர் பாவ்ஸ் (FOUR PAWS EXPERTS) தன்னார்வலர்கள். இதையொட்டி, யானையுடன் நட்பை உருவாக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

யானைகளே இல்லாத பாகிஸ்தான் நாட்டுக்கு 1985 - ம் ஆண்டு ஒரு வயதான காவன் எனும் யானையை அன்பளிப்பாக வழங்கியது இலங்கை நாடு. பிறகு காவனுக்குத் துணையாக 1990 - ல் சஹோலி எனும் பெண் யானையை வழங்கியது. இரண்டு யானைகளும் இஸ்லாமாபாத் மிருகக் காட்சி சாலையில் வளர்ந்து வந்த நிலையில் 2012 - ம் ஆண்டு சாஹோலி யானை உயிரிழந்தது.

kavan elephant,pakistan,cambodia,court ,காவன் யானை, பாகிஸ்தான், கம்போடியா, நீதிமன்றம்

அதற்குப் பிறகு மிகச்சிறிய கொட்டகையில் தனிமையில் வாழ்ந்தது காவன் யானை. பொதுவாக யானைகள் மித வெப்பநிலையில் வாழ்பவை. ஆனால், பாகிஸ்தானில் நிலவும் அதிவெப்பநிலையால் காவன் யானையின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 2015- ம் ஆண்டுவாக்கில் காவன் மூர்க்கத்தனத்துடன் இருந்ததால், அதை சங்கிலியில் கட்டி வைத்தனர்.

அப்போது தனிமை காரணமாக விரக்தி தாங்கமுடியாமல் காவன் யானை சுவரில் தலையை முட்டிக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படத்தால் உருவான அதிர்வலையால் காவன் யானையை விடுவிக்க வேண்டும் என்ற குரல் உலகம் முழுவதும் எழுந்தது.

புகழ்பெற்ற பாப் பாடகியான செர் கூட காவன் யானையை விடுவிக்க வேண்டும் அல்லது காவன் யானைக்குத் துணையாகப் பெண் யானையை அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது தொடர்பாக, பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் யானையை விடுவித்து விடலாம் என கடந்த மே மாதத்தில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, காவன் யானையை கம்போடியாவில் உள்ள சரணாலயத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சோர்வடைந்து காணப்படும் யானையை பாடல்கள் வழியாக உற்சாகமான மன நிலைக்கு கொண்டு வரவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :