Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 8 ஆண்டுகளுக்கு பின் திட்டமிட்ட ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது மேட்டூர் அணை; விவசாயிகள் மகிழ்ச்சி

8 ஆண்டுகளுக்கு பின் திட்டமிட்ட ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது மேட்டூர் அணை; விவசாயிகள் மகிழ்ச்சி

By: Nagaraj Mon, 18 May 2020 3:54:18 PM

8 ஆண்டுகளுக்கு பின் திட்டமிட்ட ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது மேட்டூர் அணை; விவசாயிகள் மகிழ்ச்சி

வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதம் 12ம் தேதியில் மேட்டூர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

farmers,mettur dam,opening,cm,order,happiness ,விவசாயிகள், மேட்டூர் அணை, திறப்பு, முதல்வர், உத்தரவு, மகிழ்ச்சி

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சி அடியாகவும் உள்ளது. இது, 50 நாள்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க உத்தரவிட்டுள்ளேன்.

போதிய அளவு நீர் இல்லாத சூழ்நிலையிலும், நவீன பாசன முறைகளை கடைபிடித்து, உணவு தானிய உற்பத்தியில் சாதனை அளவைக் கடந்து மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 5 முறை தமிழ்நாடு பெற்றுள்ளது. தற்போது, உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் நமது மாநிலம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எட்டு ஆண்டுக்குப் பிறகு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
|
|