Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:35:00 AM

காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

நம்பிக்கை இல்லாத தீர்மானம் தோல்வி... கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி (எல்டிஎப்) அரசு மீது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் (யுடிஎப்) பேரவையில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியுடன் கேரள முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக நேற்று சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில், கேரள அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பேரவை நேற்று ஒரு நாள் மட்டும் கூடியது. அப்போது நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நிதி மசோதா நிறைவேறியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசினார். அப்போது, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

kerala,legislature,no-confidence motion,defeat ,கேரளா, சட்டப்பேரவை, நம்பிக்கையில்லாத் தீர்மானம், தோல்வி

ஆனால் 14 நாட்களுக்கு முன்நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று கூறி அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏ வி.டி.சதீஷன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் கேரள சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு முதல்வர் உம்மன் சாண்டி அரசுக்கு எதிராக கொடியேறி பாலகிருஷ்ணன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதன்பின் கொண்டுவரப்படவில்லை.

வி.டி.சதீஷன் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும், கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் பி.ஜே. ஜோசப் தலைமையிலான எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த சதீஷன் பேசும்போது, ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களும் அதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் காரசாரமாக மோதலில் ஈடுபட்டனர். இறுதியில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டு கேள்விகளை எழுப்பினர். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதில் அளிக்காமல் முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து பேசினார். இதைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Tags :
|