போராட்டக்காரர்கள் முன்பு போலீசார் மண்டிட்ட புகைப்படங்கள் செம வைரலாகிறது
By: Nagaraj Thu, 04 June 2020 11:50:49 AM
அமெரிக்காவில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மண்டியிட்ட சம்பவம் அனைவரையும் வியப்புக்குள் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகர் மினியாபொலிசில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கடந்த மாதம் 25ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பல்வேறு நகரங்களில் நாடு முழுவதும் கருப்பின மக்கள் திரண்டு வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் போராட்டக்காரர்களும் கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி போலீஸ்சார் அவர்களை விரட்டி அடித்தனர்.
40 நகரங்களில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்டது, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்வது போன்றும், துக்கத்தில் கலந்து கொள்வது போன்றும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள நூற்றாண்டு ஒலிம்பிக் பூங்கா அருகே நடந்த போராட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் கேடயத்தை வைத்து போராட்டக்காரர்களின் முன் மண்டியிட்டனர். மேலும் காவல்துறை டென்வர் தலைவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் உடன் சேர்ந்து காணப்பட்டார். மற்றொரு புகைப்படத்தில் ஹெல்மெட், கேஸ் மாஸ்க் மற்றும் உடுப்பு அணிந்து ஒரு போலீஸ் அதிகாரி தெற்கு நகரில் நடந்த நான்காம் நாள் போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை அரவணைத்துக் கொண்டிருந்தார்.
நியூயார்க் நகர காவல்துறை தலைவர் டெரன்ஸ் மோனஹான் போராட்டக்காரர்களை கட்டித்தழுவி, அவர்களுடன் மண்டியிட்டார். மேற்கு கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலில் வான் நியூஸ் பகுதியில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தின்போது நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி எதிர்ப்பாளர் கெவின் வெல்பெக் கைகுலுக்கிய சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.