Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசு ஒரு போதும் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்காது- அமைச்சர் பி. தங்கமணி

தமிழக அரசு ஒரு போதும் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்காது- அமைச்சர் பி. தங்கமணி

By: Monisha Tue, 22 Dec 2020 11:43:18 AM

தமிழக அரசு ஒரு போதும் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்காது- அமைச்சர் பி. தங்கமணி

வினியோக பிரிவில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள துணை மின்நிலையத்தையும், பணியிடங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மின்சார வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மூன்று முக்கிய வாயில்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் பி. தங்கமணி வாரிய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு ஒரு போதும் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்காது. முதலமைச்சரின் கொள்கையும் அதுதான். அதுபோன்ற நிலைமை ஏற்படாது. இதுகுறித்து முழுமையாக விளக்கம் கொடுத்து இருந்தேன். இருந்தும் தொழிற்சங்கங்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவோம் மாறாக தனியார்மயமாக்க ஒத்துக்கொள்ள மாட்டோம்.

இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தோம். பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துவிட்டார்கள். இருந்தாலும் கூட மின்சார வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் தனியாருக்கு வழங்கும் ஆணையை திரும்ப பெற்றுக்கொள்கிறோம். எந்த இடத்தில் 50 சதவீதத்துக்கு மேல் காலிப்பணியிடம் இருக்கிறதோ? அங்கு பணிகளில் தொய்வு இல்லாமலும் விபத்து மற்றும் தடையில்லாத மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியில் உள்ள ஆட்களை வைத்து பணிகளை செய்யுங்கள் என்று சொல்லி இருந்தோம். அதனை அவர்கள் தவறுதலாக புரிந்து கொண்டு விட்டார்கள்.

electricity board,workplaces,struggle,explanation,cancellation ,மின்சாரவாரியம்,பணியிடங்கள்,போராட்டம்,விளக்கம்,ரத்து

கேங் மேன் பதவிக்கு 5 ஆயிரம் பேர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் காலிப்பணியிடம் அதிகமாக இருப்பதால் 10 ஆயிரமாக எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி விண்ணப்பித்த 90 ஆயிரம் பேருக்கு தேர்வுகள் நடத்தி 15 ஆயிரம் பேரை தேர்வு செய்திருந்தோம். இதற்கிடையில் ஐகோர்ட்டுக்கு சென்று தடை ஆணை வாங்கி உள்ளார்கள். தடை வாங்காமல் இருந்திருந்தால் அனைவருக்கும் பணி வழங்கி இருப்போம்.

தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நாளைய தினமே அந்த வழக்கை வாபஸ் வாங்கினால் இந்த வாரமே 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படும். பணி வழங்காமல் இருப்பதற்கு அரசு காரணம் இல்லை. தொழிற்சங்கங்கள் தான் காரணம். அதேபோல் 600 உதவி பொறியாளர்கள், ஐ.டி.ஐ. படித்த 2,900 கள உதவியாளர்களை புதிதாக வேலைக்கு எடுக்க இருக்கிறோம். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனியார் மயமாக்குவதற்கு முன்னோடியாக அதானிக்கு பயிற்சி அளித்து வருவதாக தொழிற்சங்கங்கள் ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு செய்தியை பரப்பி வருகின்றனர்.

ஒரே ஒருவர் மட்டும் பயிற்சி பெற்று வருகிறார். அவர்கள் மட்டும் அல்ல ரூ.40 ஆயிரம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பயிற்சி எடுத்து கொள்ளலாம். ஒரு நபர் மூலம் தான் தனியார் மயமாக்கப்போகிறோமோ? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். பேட்டியின் போது வாரியத்தலைவர் பங்கஜ்குமார் பன்சால் உடனிருந்தார். மேலும், ஐந்து துணை மின் நிலையங்களை, தனியாரிடம் பராமரிப்பதற்கான வழங்கப்பட்ட ஆணையை நேற்று தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்தது. இதற்கான ஆணையை மின்சார வாரிய இயக்குனர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Tags :