Advertisement

கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தகவல்

By: Nagaraj Wed, 12 Aug 2020 12:45:13 PM

கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தகவல்

கடுமையான ஆய்வு தேவை... உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ரஷ்யாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்’ என தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

vaccine,russia,rigorous testing,world health organization ,தடுப்பூசி, ரஷ்யா, கடுமையான சோதனை, உலக சுகாதார அமைப்பு

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்த நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புடின், கொரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செய்படுகிறது என்றும் தெரிவித்தார். இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதோடு, இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது என குறிப்பிட்டார்.

மேலும் இந்த தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், இது பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதேவேளை, 3ஆவது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|