இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா விதிமுறைகள் விதிக்க அவசியமில்லை
By: Nagaraj Sun, 22 Jan 2023 5:05:50 PM
இலங்கை: சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்... இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கடந்த 17ஆம் திகதி திட்டமிட்டிருந்தது. பின்னர் அது 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு புதிய சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.