பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்... முன்னாள் முதல்வர் மகன் குற்றச்சாட்டு
By: Nagaraj Sun, 17 Sept 2023 6:14:21 PM
ஆந்திரா: பொய் வழக்கு... ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தூய்மையானவராக சிறையில் இருந்து வெளியே வருவார் என தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி வந்துள்ள நாரா லோகேஷ், ஊழல் புரியாத அரசியல்வாதி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சந்திரபாபு நாயுடு விளங்குவதாகவும் தெரிவித்தார்.
அரசுப் பண முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும், சந்திரபாபு நாயுடு மீது பொய்யான வழக்கை ஆந்திர பிரதேச அரசு தொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசுப் பணத்தில் 371 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிறப்புப் புலனாய்வுத் துறையால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, வருகிற 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.